×

அயோத்தி வழக்கிலிருந்து நீதிபதி லலித் விலகல் : விசாரணை ஜன., 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி : அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும், 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, அயோத்தி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.அதன்படி கடந்த 8ம் தேதி அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திராசூட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் தவான் என்ற வழக்கறிஞர், அயோத்தி தொடர்பான வழக்கில் பாஜகவின் மூத்த தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக நீதிபதி யு.யு.லலித் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வழக்கை நீதிபதி யு.யு.லலித் விசாரித்தால் வழக்கு ஒருதலைப்பட்சமாகவே விசாரிக்கப்படும் என்று கூறினார். இந்த ஆட்சபனையை ஏற்று வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி லலித் அறிவித்தார். இதனையடுத்து அயோத்தி வழக்கு விசாரணையில் புதிய நீதிபதியை சேர்த்த பிறகு ஜன., 29ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்து ஒத்திவைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalith Dikshal ,trial ,Ayodhya , Ayodhya case,Judge Lalith,The Supreme Court, Judge Ranjan Kokai
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்